சிக்கல் கோலம்
அந்த ஊரில் வீடுகள் மிக குறைவு தான். நடுத்தெரு மேலத்தெரு கீழத்தெரு என மூன்றே தெருக்கள்.தெருவுக்கு ஏழு முதல் எட்டு வீடு இருக்கும்.ஊர் எல்லை முச்சந்தியில் ஆலமரத்தடி பிள்ளையார் கோவில் ஒன்று ஊர் வடக்கு எல்லையில் சுடுகாட்டுக்கு ஒரு பரலாங்குக்கு முன் சுடலை சாமி கோவில் ஒன்று நடுதெருவின் முடிவில் முப்பிடாரி அம்மன் கோவில் என மொத்தம் மூன்று கோவில் சாமிகள் உண்டு அந்த ஊர் மக்கள் துன்பத்தில் கடிந்து கொள்ளவும் மகிழ்ச்சியில் போற்றி கூறவும். மேலத்தெரு முதல் வீட்டில் பாத்திரம் தவறினால் கூட கீழத்தெருவின் கடைசி வீடு வரை செய்தி பறந்துவிடும். அது ஒற்றுமையா இல்லை அண்டை வீட்டு சமாச்சாரங்களை அறிவதில் உள்ள சுவாரசியமா என்ற கேள்வி எழுந்தால் சரியான பதில் கூறுவது கொஞ்சம் கடினம் தான். நடுதெருவிலே உசந்து நிக்கிற சங்கர பண்ணையார் வீட்டில் இருந்து கீழத்தெரு சுடலை கோயில் முந்தய கூரை வீட்டில் இருக்கிற முனிசாமி வீடு வரைக்கும் அத்தனை பேருக்கும் ஒரே தொழில் தான் , விவசாயம்.வித்தியாசம் ஒன்றுதான் சங்கர பண்ணையார் சொந்தமா நிலம் வச்சிருந்தார்.முனுசாமி அவர் நிலத்திற்கு களை பறிக்க போவார். சொந்த வயிலோ கூலிக்கு அடுத்த...