கூடை

 சாகினி வழக்கம் போல அன்னிக்கு கோவிலுக்கு போயிருந்தா. அவளுக்கு கோவிலுக்கு போறதுனா ரொம்ப இஷ்டம். வாரத்தில் திங்கள், செவ்வாய்,சனி இப்படி மூன்று நாள் போயிடுவா.இது தவிர பிரதோஷம்,சங்கடகரசதுர்த்தி இப்படி எதாச்சு ஒன்னு வேற கிழமைகள் வந்தா இந்த மூன்று நாள் கணக்கோட அதுவும் சேர்ந்து கொள்ளும். அவள் தோழிகள் இதுக்காக பல நாள் அவளை கிண்டல் செஞ்சதும் உண்டு. இந்த வயசுல ஜாலியா லைஃப் என்ஜாய் பண்றத விட்டுட்டு எப்போதும் கோவில் கோவில்னு சுத்துரியேனு.அதுக்கு இது வரை அவங்களோட அவள் விவாதம் பண்ணிகிட்டதே கிடையாது. ஒரு புன்னைகை மட்டும் தான் அவங்களோட அந்த கேள்விகளுக்கு அவள் கிட்ட இருந்து வருகிற பதில். மற்றவர்கள் எண்ணத்தையும் செயலையும் விவாதம் பண்ணுகிற பழக்கம் அவளுக்கு எப்பவும் இருந்ததில்லை. அதே மாதிரி தன்னோட பழக்கங்களை விவாதம் பண்ணுகிற வேர்களின் பேச்சை பெருசா கண்டு கொள்வதுமில்லை.


இத்தனை பக்தியோட கோவிலுக்கு போறவள், அவளோட அம்மா நேரம் சரியில்லை சாமிக்கு இந்த பரிகாரம் பண்ணு அந்த பரிகாரம் பண்ணுன்னு சொன்னா மட்டும் பண்ண மாட்டாள். என்னால் அதுலாம் பண்ண முடியாதுனு மூஞ்சில அடிச்ச மாதிரி மறுத்து பேசிவிடுவாள்.அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கனு கடவுளுக்கு பண்றதுலாம் பக்தியில் சேராது. அது காரியம் நடக்கிறதுக்காக கடவுளுக்கு  கொடுக்கிற லஞ்சம். என்னால அதுலாம் முடியாது. அவருக்கு ஒன்ன செஞ்சு எனக்கு இதை கொடு அதை கொடுனு பேரம் பேச நான் கோவிலுக்கு போகல. கஷ்டமே தராதன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிற அளவுக்கு நான் முட்டாளில்ல,கஷ்டம் வந்தா என் கூட நின்னு அதை நல்ல படியாக போராடி ஜெயிக்கிற மனதைரியத்தை எனக்கு கொடுன்னு கேட்கவும்,இதுநாள் வரைக்கும் எனக்கு துணையா நின்னிகிட்டு இருக்கிறதுக்கு நன்றி சொல்லவும் தான் நான் கோவிலுக்கு போறேன். உனக்கு என்ன பண்ணணும் நான் ஆசை பட்டு பண்ற மாதிரி,கடவுளுக்கும் என் மனசு எதை ஆசையா செய்ய சொல்லுதோ, அதை தான் செய்வேன்னு ஒரு நீளமான விளக்கத்தை பதிலாக கொடுப்பாள்.அந்த விளக்கத்தை பல தடவை கேட்டு கேட்டு சலிச்சு போய் அவங்க அம்மா அவகிட்ட பரிகாரம் பண்ண சொல்லறதையே ஒரு கட்டத்தில் நிப்பாடிட்டாங்க.


சாகினியை பார்க்கிறப்ப அவள் அம்மாவிற்கே சில சமயம் ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். சின்ன வயசுலே அப்பாவ இழந்து இத்தனை கஷ்டங்கள் பார்த்த அப்புறம் கூட இவ்ளோ உறுதியா இருக்கிறாளே இவள்.இவ வேண்டிக்கிற மாதிரியே கடவுள் எப்பவும் இவ கூட நிக்கிறான் போல,அதான் இப்படி தளராம எல்லாத்தையும் தாங்கிக்றா.நியாயமா பார்த்தா அவரு போன அப்புறம் நான் தான் அவளை அதிக உறுதியோட நின்னு பார்த்திருக்கனும். ஆனா அந்த சமயத்தில சுக்கு நூறாக உடைஞ்சு போன என்னை பெரிய மனுசியாட்டம் உறுதியா நின்னு தேத்தி, படிப்புலையும் நல்ல படியா கவனம் செலுத்தி,நல்ல உத்தியோகத்தையும் தேடிகிட்டு பொறுப்பா என்னையும் பார்த்துக்கிறாள் என்று அப்பப்ப தன் மகளை நினைச்சு பெருமிதம் பட்டுக் கொள்வாள் சாகினியின் அம்மா.


சாகினிக்கு கடவுளுக்கு அடுத்து ரொம்ப பிடித்தது பூக்கள்.அந்த பூக்களை கடவுளுக்கு படைக்கிறது இன்னும் அவளுக்கு பிடிக்கும். கோவிலுக்கு போகும் போதெல்லாம் தவறாமல் பூ வாங்கி கொண்டு போவாள்.அன்னைக்கும் அதே மாதிரி பூ வாங்கிட்டு ஆர்வமாக கோவிலுக்குள் போய்கிட்டு இருந்தாள், 'அம்மா ரொம்ப பசிக்குதுன்னு' அவள் முன்னாடி கையை நீட்டின வயசான பிச்சைகாரருக்கு பர்சை துளாவி தேடி பிடிச்சு ஒரு ரூபா சில்லறையை அவர் கையில் போட்டுவிட்டு பெரிய தானம் செய்துவிட்ட திருப்தியோடு கோவிலுக்குள் சென்றாள்.


கடவுளுக்காக அவள் வாங்கி வந்திருந்த பூ வை  பூசாரிகிட்ட பூ குடுத்திட்டு மனதார வேண்டிக் கொண்டாள்.

அந்த பூவை சாமி பாதத்தில் போட்டு தீபாராதனை முடிச்சிட்டு ஏற்கனவே சாமி பாதத்தில் இருந்த ஒருசில பூச்சரங்களை தீபராதனை தட்டோடு எடுத்து வந்து  தன் தட்டில் கனிசமாக காசு போடுகிற ஆசாமிகளுக்கு அந்த பூச்சரத்தை அவர் கொடுத்துக் கொண்டு இருந்தார். அது அவள் கோவிலுக்கு வரும் பொழுதெல்லாம் வழக்கம் போல் நடப்பது தான் என்றாலும் ஒவ்வொரு தடவையும் அதை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு ஆத்திரம் வரும்.

 இந்த பூசாரிக்கு எல்லாருக்கும் சமமா பூ குடுத்தா தான் என்னவாம். இப்படி பண்றாறேனு என்று மனதுக்குள் திட்டிக் கொள்வாள்.அன்னிக்கும் அதே மாதிரி திட்டி கொண்டே பிராகரத்தை சுற்ற ஆரம்பித்தாள்.

சுற்றிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு தூணின் பின்பகுதியிலிருந்து தன் அழுக்கு புடவையின் முந்தானையை இடுப்பில் சொருகி கொண்டு, பூக்கள் நிரம்பி வழிகிற ஒரு கூடையை தூக்கி கொண்டு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், கோவிலின் தெற்கு பக்கமாக போவதை பாரத்தாள்.இதுலாம் சாமிக்கு படைச்ச பூ மாதிரி இருக்கு. இதை எங்க எடுத்திட்டு போறாங்க என்று மனதிற்குள் கேள்வி எழுப்பியபடியே, அந்த அழுக்கு கூடை எடுத்து செல்லும் பெண்மணியிடமே தன் சந்தேகத்தை  கேட்டு விட முடிவு செய்து அவள் பின்னாடி வேகமாய் நடந்து சென்று அவளை பிடித்தாள்.


‘அக்கா,நில்லுங்க.இது சாமிக்கு படைச்ச பூதானே??’


‘ஆமாம்மா'


‘இதை எங்க எடுத்திட்டு போறீங்க'


‘அதோ அந்த மூலையில தெரியுது பாரு அந்த சிமெண்ட் தொட்டியில கொட்டத்தான்'.


'இதை எதுக்கு அங்க கொட்டனும்'


‘'ம்ம், பிறகு இதை என்ன கண்காட்சியிலையா போய் வைக்க சொல்ற. இந்த பூசாரிங்க வர எல்லாருக்கும் சமமா இத கொடுத்தா இம்புட்டு பூ குப்பைக்கு வராது. பணத்துக்கு செத்தவனுங்க.அதையும் செய்ய மாட்டானுங்க. சாமி கும்பிட வரவனுங்களும் வெளியில பசியோட கைய நீட்டுற மனுசனுக்கு பத்து காசு போட பத்தாயிரம் தடவ யோசிப்பானுங்க.ஆனா பத்து முழத்துக்கு பூவ மட்டும் பவுசா வாங்கிட்டு வந்திருவானுங்க.என்னத்த சொல்றது.சரிம்மா எனக்கு இன்னும் வேலை குவிஞ்சு கிடக்கு. நான் வாரேன்.’சொல்லி விட்டு கூடைக்காரி நகர்ந்தாள்.


சாகினிக்கு பளிச்சென்று கண்ணத்தில் அறைந்தது மாதிரி இருந்தது அந்த கூடைக்காரி கொடுத்து சென்ற விளக்கம். கும்பி வெந்து கிடக்கிறவன் வயித்த நிறைக்காம, இந்த கூடையை நிறைக்கவா இத்தனை நாள் பூ வாங்கிட்டு வந்தோம்னு தன்னை தானே திட்டிக் கொண்டாள்.அதிலிருந்து கோவிலுக்கு பூ வாங்கி செல்லுகிற பழக்கமே அவளை விட்டு போய்விட்டது.அன்றிலிருந்து வாசலில் பசியோடு இருக்கிற ஒருத்தருக்காவது சாப்பாடு வாங்கி கொடுக்காமல்  அவள்  கோவிலுக்குள் போவதில்லை.




Comments

Popular posts from this blog

சிக்கல் கோலம்

கொடை

போதை