கொடை

  ஊரே களைகட்டியிருந்தது. பத்து வருடத்திற்கு ஒரு முறை வரும் மாடன் கோவில் “கொடை”  க்கு  வழக்கமான  மக்கள்  தொகையிலிருந்து  ஊரின் மக்கள் தொகை இரண்டு  மடங்கு அதிகரித்திருக்கும். “கொடை” நடப்பது மூன்று நாள் என்றாலும், அதற்கான குதூகலிப்பு ஊர் மக்களின் மனதில் ஐந்தாறு மாதங்களுக்கு முன்பே பூக்க தொடங்கிவிடும்.

“மக்கா இந்த வருஷம் கொடைக்கு தவறாம வந்திரனும் “ என்ற அழைப்பு ஊரின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியூரில் இருக்கும் அவர்களின் சொந்தங்களுக்கு பறக்கும்.

ஊரை விட்டு இரண்டு மூன்று தலைமுறைக்கு முன் காலி செய்துவிட்டு போன குடும்பங்களின் வாரிசில் வந்த “பேரனும்” “கொள்ளு பேரனும்” கூட குடும்பத்தோடு மாடன் கோவில் கொடைக்கு வந்துவிடுவார்கள்.

“நீ அவனுக்கு மவனா……சின்ன பிள்ளையில பாத்தது…….உங்க அப்பனுக்கு சாயல் அப்படியே இருக்கு…….” என்று ஊரின் பெருசுகள், எதிரே பார்பவர்களையெல்லாம் ஏதேதோ விவரம் கேட்டும் சொல்லியும் குசலம் விசாரித்து கொள்ளும்.

பெரும்பாலும் எல்லோர் வீட்டு முற்றத்திலும், கடைசியாக நடந்து முடிந்திருந்த கொடைக்கும் இந்த கொடைக்கும் இடையேயான பத்து வருட இடைவெளியில், எதோ ஒரு தருணத்தில் மாடனுக்கு வெட்டுவதாக நேர்த்தி கடனாக வேண்டிக் கொண்ட ஆட்டை வெட்டுவதற்காக, ஒரு ஆடு வாங்கி வந்து கட்டியிருப்பார்கள்.

நான் சின்ன பிள்ளையா இருந்த காலத்தில், இப்படி நேர்த்தி கடனுக்காக செலுத்த பட வேண்டிய ஆடுகள், ஒரு வருடத்திற்கு முன்பே வாங்கி வரப்பட்டு அந்த வீடுகளில் சீரும் செழிப்புமாக வளர்க்கப்படும். நேர்த்தி கடன் செலுத்தப்படும் ஆடுகளிலேயே தன்னுடைய ஆடு தான் எடை கூடியாதாக இருக்க வேண்டுமென்ற நினைப்பில் போட்டி போட்டு கொண்டு அந்த ஆடுகள் வளர்க்கப்படும்.

இப்பொழுது இருக்கிற காலகட்டத்தில் அதற்கெல்லாம் யாருக்கும் நேரம் இருப்பதில்லை. கொடைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு கடையில் நேரம் பேசி ஒரு ஆட்டை பிடித்து வந்து வீட்டு முற்றத்தில் கட்டி விடுகிறார்கள்.

மூன்று நாள் கொடை வெகு விமர்சையாக நடக்கும். முதல் நாள் கொடையன்று சாயங்காலம் தான் கொடை கலை கட்ட ஆரம்பமாகும்.”வருத்து” பாடி சாமியை அழைக்க ஆரம்பிப்பார்கள். மாடன் பிறந்த கதையில் இருந்து எங்கள் ஊர் வந்து குடியேறிய கதை வரையிலும் ஒவ்வொன்றும், அழகான ராக தாளத்தோடு எடுத்துரைக்கப்படும். வருத்து பாடும் வில்லுபாட்டுகாரரை விட அவருக்கு “ஆமா” போடும் ஆமா பாட்டுகாரரின் தாளம் அமோகமாக இருக்கும்.

இரண்டாவது நாள் பண்ணிரெண்டுக்கு மணிக்கு கொடையின் வேகம் இன்னும் அதிகரிக்கும். “மந்திரமூர்த்தி”யில் ஆரம்பித்து “சுடலைமாடன்” “புலமாடன்” என்று ஒவ்வொரு மாடனுக்கும் ஒருவர் என்ற விகிதம் பதினெட்டு ஆசாமிகள் சாமி ஆடுவர். “கொட்டு” சத்தம் அந்த சிறு மாடன் கோவிலின் ஓட்டு கூரையை தாண்டி வானத்தை துளைக்கும். “கொடை” கூட்டத்தில் நிற்கும் மனிதர்களின் உடல் மயிர் கூச்செறிந்து சிலிர்த்து கொள்ளும்.சாமி ஆடிய ஆசாமிகள், ஆடி தளர்ந்து திருநீறு பிராசாதம் பரிமாற, பய பக்தியோடு அதை கையில் வாங்கி கொண்டு ஏந்திய கைகளோடு அவரவர் வீட்டிற்கு போய்விடுவார்கள். 

ஆடு வெட்டும் சம்பிரதாயம், இரண்டாம் கொடையன்று இரவு அரங்கேறும். ஆடு வெட்டுதல், சாமி “மாசான கொள்ளை” செல்லுதல்,”உருதம்” குடித்தல் என இரவு கொடை சூடு பிடிக்கும். சாமி “மாசான கொள்ளை” சென்றிருக்கும் கோவிலுக்குள் எந்த சலசலப்பும் இருக்காது. அனைவரும் அமைதியாகி கோவிலுக்குள்ளும் “மாசான” அமைதி கடைபிடிக்கப்படும். “மனசாட்சி” க்கு பயப்படாத  “கொள்ளை” காரனும் “கொலை” காரனும், கூட “மாடனுக்கு” பயப்படுவான்.

இரண்டாவது நாள் தங்கள் தரப்பில் வெட்டப்பட்ட ஆட்டின் கரி மூன்றாவது நாள் கொடையன்று அவரவர் வீட்டு அடுப்பில் குழப்பமாய் மாறி கொதித்து கொண்டிருக்கும். மூன்றாவது நாள் மதியம் மீண்டும் சாமி ஆட்டம் அரங்கேறி “உச்சி கொடை” முடிந்து , சாமியாடிய ஆசாமிகள் மஞ்சள் தண்ணீர் ஊற்றிக் கொள்ள, ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் வர, பய பக்தியோடு அவர்களுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி திருநீறு பெற்று கொள்வார்கள் வீட்டு பெண்டுகள். சாமி ஆடும் ஆசாமிகளுக்கு வரும் “பொய்க்கால் குதிரை”யும் “கணியான்” ஆட்டத்தையும் பார்த்து குழந்தைகள் மகிழ்வார்கள். பின்பு அன்று சாயங்காலம் மறுபடியும் ஊரே திரண்டு கோவிலுக்கு போய் சாமிக்கும்,  சாமிஆடியோருக்கும் “வாழி” பாடி “கொடை” இனிதே நிறைவேறும்.

கடைசியாக நடந்து முடிந்திருந்த “கொடை” க்கு , நான் வரவில்லை. “கொடை” க்கு ஆறு மாதத்திற்கு முன்பு தான் வேலை விசயமாக “அமெரிக்கா” சென்று வேலை நிமித்தமாக, வர முடியாத சூழலில் அங்கு மாற்றிக் கொண்டேன்.

அந்த “கொடை” யை தவற விட்ட வருத்தத்தில் பத்து வருஷமாக அடுத்த கொடை எப்ப வரும் என்று மனதுக்குள் வருடங்களை எண்ணி நகர்த்தி இப்பொழுது இந்த “கொடை” க்கு என் “எட்டு” வயது மகளோடும் மனைவியோடும் வந்திருக்கிறேன்.

பத்து வருடங்களுக்கு முன் அமெரிக்கா போய் அங்கேயே “செட்டில்” யாகி, விட்டேன். என் மகள் கூட அமெரிக்காவில் தான் பிறந்தாள். அவளுக்கு இந்த “கொடை” கொண்டாட்டம் எல்லாம் பார்பதற்கு பயங்கர குஷியாகயிருந்தது. 

எங்கள் வீட்டு முற்றத்திலும் ஆடு கட்டப்பட்டிருந்தது. என் மனைவியின் பிரசவத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்ட சமயம், என் அம்மா மாடனுக்கு வேண்டிக் கொண்டிருந்த நேர்த்தி கடனை தீர்ப்பதற்காக அந்த ஆடு சந்தையிலிருந்து பிடித்து வரப்பட்டிருந்தது.

என் மகள் முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை தொட்டு தொட்டு பார்த்து விளையாடி கொண்டிருக்க, நானும் என் மனைவியும் அதை வேடிக்கை பார்த்தபடி பேசி கொண்டிருந்தோம்.

“டாடி ஒன் டவுட்” ஆட்டை தொட்டு பார்த்து கொண்டிருந்த கைகளை அட்டேன்சனில் கொண்டு வந்து தீவிரமாக சந்தேகம் கேட்கும் தோரணையில் ஆயுத்தமாகியிருந்தாள் என் மகள்.

“என்ன மக்களே, கேளு” இது நான். அமெரிக்காக்கே  போனாலும் அன்புக்குரியவர்களை “மக்களே”ன்னு கூப்பிடும் பழக்கம் மட்டும் நாஞ்சில் நாட்டுக்காரன் நாவை விட்டு அகலாது.

“எதுக்காக ஆடு சாமிக்கு கொடுக்குறாங்க??” அவள் மழலையில் கேட்டாள்.

“பாட்டி ஆடு சாமிக்கு தரேன்னு சொல்லிருக்காங்கடா” நான் சொல்லி முடிக்க, அவள் ஓடி வந்து எனக்கும் என் மனைவிக்கும் நடுவில் அமர்ந்து கொண்டாள்.

“இல்ல டாடி. எவ்வளவோ அனிமல்ஸ் இருக்கு.”டாக்,கேட்……” “ விரல் விட்டு எண்ணினாள். “அப்புறம் ஏன் கோட் மட்டும் சாமிக்கு கொடுக்குறாங்க” -விரல்களை என் முகத்தின் முன்னால் நீட்டினாள்.

“ஆஹா…..இத்தின நாள்ல…இந்த ஆங்கிள்ல நானே யோசிச்சதில்லேயே .இப்ப என்ன பதில் சொல்லுவேன்” -பேந்த பேந்த விழித்து கொண்டிருந்தேன்.

“சொல்லுங்க டேடி ….” என்னை உலுக்க ஆரம்பித்தாள்.

என்னை பார்த்து ஒரு சின்ன சிரிப்பு சிரித்தபடி என் மனைவி பதில் சொல்ல ஆயுத்தமானாள்.

“முன்னாடி தட்சன்ன்னு ஒரு ராஜா இருந்தாரு………….” என்று ஆரம்பித்து “………..ஆடு ஆணவமான அனிமல் . அது எல்லாத்தையும் விட நாம தான் பெஸ்ட்னு மனசுக்குள்ள எப்போதும் பெருமை பாட்டுக்குமாம். அதுனால ஆடு வெட்டிட்டு மனுசன் அவன் மனசில இருக்கிற ஆணவத்தையும் தற்பெருமையையும் சாமி முன்னாடி விட்டுட்டு வந்திடனும். அதுக்கு தான் ஆடு சாமிக்கு கொடுக்குறாங்க” என்று ஒரு நீளமான கதையை என் மனைவி மகளிடம் சொல்லி கொண்டிருக்க, அவள் பாதி புரிந்தும் புரியாமலும் அதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

“இவள் சொல்லும் கதை உண்மையா..இல்ல சும்மா அடிச்சு விடுறாளா” என்று நான் என் மனைவியின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தேன்.

“எலே…..நம்ம ஆடு தாம்ல இந்த கொடையிலேயே பெரிய ஆடா இருக்க போகுது. இந்த கொடையென்ன இது வர எவனுமே இப்படி ஒரு ஆடு சாமிக்கு தறிச்சிருக்க மாட்டான். நான் யாரு……” என்று பெருமிதமாக பேசிக் கொண்ட பக்கத்து வீட்டு முருகேசன் குரல் எங்கள் காதுகளில் கேட்டது.

மனைவியும் நானும் ஒருவரையொருவர் பார்த்து மெளனமாய் புன்னகைத்து கொண்டோம்.







Comments

Popular posts from this blog

சிக்கல் கோலம்

போதை