சிக்கல் கோலம்

 அந்த ஊரில் வீடுகள் மிக குறைவு தான். நடுத்தெரு மேலத்தெரு கீழத்தெரு என மூன்றே தெருக்கள்.தெருவுக்கு ஏழு முதல் எட்டு வீடு இருக்கும்.ஊர் எல்லை முச்சந்தியில் ஆலமரத்தடி பிள்ளையார் கோவில் ஒன்று ஊர் வடக்கு எல்லையில் சுடுகாட்டுக்கு ஒரு பரலாங்குக்கு முன் சுடலை சாமி கோவில் ஒன்று நடுதெருவின் முடிவில் முப்பிடாரி அம்மன் கோவில் என மொத்தம் மூன்று கோவில் சாமிகள் உண்டு அந்த ஊர் மக்கள் துன்பத்தில் கடிந்து கொள்ளவும் மகிழ்ச்சியில் போற்றி கூறவும்.  மேலத்தெரு முதல் வீட்டில் பாத்திரம் தவறினால் கூட கீழத்தெருவின் கடைசி வீடு வரை செய்தி பறந்துவிடும். அது ஒற்றுமையா இல்லை அண்டை வீட்டு சமாச்சாரங்களை அறிவதில் உள்ள சுவாரசியமா என்ற கேள்வி எழுந்தால் சரியான பதில் கூறுவது கொஞ்சம் கடினம் தான். 

நடுதெருவிலே உசந்து நிக்கிற சங்கர பண்ணையார் வீட்டில் இருந்து கீழத்தெரு சுடலை கோயில் முந்தய கூரை வீட்டில் இருக்கிற முனிசாமி வீடு வரைக்கும் அத்தனை பேருக்கும் ஒரே தொழில் தான் , விவசாயம்.வித்தியாசம் ஒன்றுதான் சங்கர பண்ணையார் சொந்தமா நிலம் வச்சிருந்தார்.முனுசாமி அவர் நிலத்திற்கு களை பறிக்க போவார். சொந்த வயிலோ கூலிக்கு அடுத்தவன் வயிலோ விவசாயம் விவசாயம் தானே. என்னதான் ஊருக்கே பண்ணையார இருந்தாலும் சங்கர முதலியாருக்கு பட்டணத்து மோகம் அதிகம். தன் பரம்பரையை பட்டணத்தில் வாழ வைத்து விட்டால் அது தன் வாழ்வின் வாழ்நாள் சாதனை என மனக்கோட்டை கட்டி வைத்திருந்தார். சங்கர் பண்ணையாருக்கு ஒரே மகன் சிவா.அவன் பண்ணிரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான். அவனை நல்லபடியாக படிக்க வைத்து பட்ணத்தில் பெரிய வேலை என்று அவர் நினைத்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு கம்பெனி வேலைக்கு அனுப்பி விட வேண்டும் என்று தீர்மானமாய் இருந்தார். 


பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வந்தது. அவர் எதிர்பார்த்ததை விட சிவா அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தான். அவன் பள்ளியிலேயே அவன் தான் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனாய் தேர்ச்சி பெற்றிருந்தான்.சிவாவின் மனப்பான்மை சங்கர பண்ணையாருக்கு நேர் எதிராய் இருந்தது. விவசாயத்தில் தான் அவனுக்கு ஆர்வம் அதிகம். அஹ்ரி படிப்பை படித்து தங்கள் நிலத்தின் மண் தரம் தன்மை என அனைத்தையும் முறைப்படி ஆராய்ந்து இன்னும் விவசாயத்தை பெருக்க வேண்டும் என்று நினைத்தான். அப்பாவிடம் தன் ஆசையை கூறி அஹ்ரி படிக்க வேண்டும் என்று முடிவுசெய்து அன்று இரவு வேலை ஆட்கள் எல்லாம் வந்து கூலி வாங்கி சென்ற பிறகு மெல்ல சங்கர பண்ணையார் அறைக்கு சென்றான்.


‘அப்பா’

‘உள்ள வாப்பா'

எப்படி அப்பாவை சம்மதிக்க வைக்க போகிறோம் என்ற தயக்கத்தோடே மெல்ல நிலை படியை தாண்டி அறையினுள் காலடி எடுத்து வைத்தான்.

‘உட்காருப்பா.வேத்து மனுசாள் அறைக்கு வந்த மாதிரி ஏன் அப்படி நிக்கிற'

'இல்லப்பா'

‘முதல்ல உட்காருப்பா' சிவா சங்கர பண்ணையார் சாய்ந்து கொண்டிருந்த சாய்வு நாற்காலியின் எதிரே இருந்த ஒற்றை மர நாற்காலியில் அமர்ந்தான்.

‘அப்பா நான் அஹ்ரி படிக்கணும்னு ஆசைப்படறேன்'

‘அஹ்ரியா…அது என்ன படிப்பு. இப்படி பெயரை மட்டும் சொன்னா எங்களுக்கு என்ன புரியும் விலாவரியா சொல்லுப்பா'

‘அஹ்ரினா…இந்த படிப்பு படிச்சா நம்ம விவசாயத்துக்கு ரொம்ப உதவியாக இருக்கும்பா. நிலத்தோட தன்மையை பற்றி தெரிஞ்சிகிட்டு விளைச்சல் இன்னும் பெருக்கலாம்..விவசாயத்தில் இன்னும் நிறைய முன்னேற்றம் கொண்டு வரலாம்பா'

‘என்னது விவசாயத்தை பெருக்க போறியா.அட கூறு கெட்ட பயலே. இப்படி தலைமுறை தலைமுறையா இந்த ஊரிலேயே முடங்கி கிடக்கலாம் நினைக்கிறயோ. பட்ணத்துக்கு போனும் வாழ்க்கையில் முன்னேறனும் ஆசையெல்லாம் இல்லையாட கூறு கெட்ட பயலே.”

‘இல்லப்பா.அது வந்து….”

“வாய மூடு.பொழைக்க தெரியாத பயலே. பக்கத்து ஊர் சரவண பண்ணையார் மகன் பெரிய படிப்புலாம் படிச்சு பட்டணத்தில் பெரிய கம்பெனில வேலை பார்க்கிறான். வேலைக்கு போய் ஆறு வருஷம் தான் ஆச்சு.மாசம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறான்.அது எதோ இன்ஸ்டயரிங் படிப்பாம்.நீயும் அதுவே படிச்சு அந்த மாதிரி பெரிய வேலைக்கு போக பாரு. மண்ணு பயிருனு மண்ணாங்கட்டி மாதிரி பேசிக்கிட்டு இருக்காத'

சிவா பதில் கூறாமல் அமர்ந்திருந்தான்.

‘என்ன துறை பதில் சொல்லாம இருக்கீறீங்க.சொன்னது விளங்கிச்சுல'

'ம்ம்' அப்பா முடிவு பண்ணிகிட்ட மாத்திக்க மாட்டாங்க. வேற வழியில்லை இன்ஜினியரிங் தான் படித்து ஆகணும் என்று மனதை தேற்றிக்கொண்டான். 

அவர் சொன்னது போலவே இன்ஜினியரிங் படித்து அவர் சொன்ன அந்த பட்டணத்து வேலைக்கும் அவன் போய் நாலு வருஷம் ஆகுது. மூன்று  மாசத்துக்கு ஒருமுறை ஊருக்கு வருவான். நான்கு ஐந்து நாட்கள் தங்குவான். அந்த நாட்களில் களை பறிக்க செல்லும் முனுசாமியை கூட அவன் கண்கள் ஏக்கத்தோடையே பார்க்கும். அதே சமயம் அவனை பற்றி பெருமையாய் பேசி அடிக்கடி தன் மீசையை முறுக்கி கொள்வார் சங்கர பண்ணையார். அவரின் பெருமித பேச்சு சில சமயம் நடுத்தெரு சந்தியில் நிற்பவர் காதுகள் வரை சென்றடையும்.பண்ணையாரின் மனைவி வேலம்மாள் தன் பிள்ளைக்கு பிடித்ததெல்லாம் சமைத்து போடுவதிலேயே முழு கவனத்தோடு இருப்பாள் அந்த நாட்களில். 'சிவா வந்திருக்கிறான் போல. பண்ணையார் வீடு கலைகட்டி போய் இருக்கு' என்று தன் கணவனிடம் கூறுவாள் எதிர் வீட்டு பாக்யம்.இப்படி தான் இந்த நான்கு ஆண்டுகள் கடந்தது.


இன்றும் சிவா ஊருக்கு வந்திருக்கிறான். ஆனால் வழக்கமான ஆரவாரம் ஏதுமின்றி வீடே அமைதியாய் இருந்துது. பாக்யத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. சிவா வந்திருக்கிறான் வேலம் அக்காவும் பண்ணையாரும் சத்தமே இல்லாமல் இருக்காங்க என்று மனதிற்குள் நினைத்தபடியே தன் வீட்டு வேலைகளை கவனித்து வந்தாள்.

நாட்கள் நகர்ந்தது.வழக்கமாக மூன்று நான்கு நாட்களுக்குள் பட்டணத்திற்கு திரும்பிவிடும் சிவா ஒரு வாரம் ஆகியும் இன்னும் பட்டணம் திரும்பவில்லை. பண்ணையாரும் ஒருவாரமாய் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கூலி வாங்க போரவங்க கிட்டையும் வழக்கமான சிரத்தையோடு பேசவில்லை.


தெருவில் ஆங்காங்கே சின்ன கூட்டம் கூட்டமாய் எல்லாரும் ஏதோ கூடி கூடி பேசிக்கொண்டனர்.வானத்தின் வெளிச்சம் மங்கலாக ஆரம்பித்து கொண்டிருந்தது. சாயங்காலம் விளக்கு வைப்பதற்காக தங்கள் வீட்டு வாசலை கோலங்களால் பெண்கள் அலங்கரிக்கும் நேரமும் வந்தது. பாக்கியம் கோலமாவை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.


‘பாக்யம் செய்தி தெரியுமா??’ ரகசிய குரலில் கோலம் விட்டபடியே தலையை மட்டும் நிமிர்த்தி கேட்டாள் பக்கத்து வீட்டு லட்சுமி.

‘என்ன செய்தி டீ. சொன்னா தானே தெரியும்' ஒத்தை கால் மண்டியில் கோலம் விட அமர்ந்திருந்த பாக்யம் பதில் கேள்வி கேட்டாள்.

'பண்ணையார் வீடு ஒருவாரமா சத்தமே இல்லாம கிடக்கு கவனிச்சியா'

‘ஆமா கவனிச்சேன். வேலம் அக்கா சத்தத்தையே காணோம்.என்ன செய்தியாம்??’

'சிவாவ அவன் வேலை பார்த்த கம்பெனியில் வேலையில இருந்து பிரிச்சு விட்டுடானாம்'

‘என்னடி சொல்ற'

'ஆமா டீ. அவன் வேலை பார்த்த கம்பெனி நஷ்டத்தில் பிஞ்சு போச்சாம். எல்லாரையும் வேலைய விட்டு பிரிச்சு விட்டுடானாம்'

‘அடபாவமே. என்ன இது கூத்தா இருக்கு.”

'பாவம் அந்த பய ஒரு வாராம வெளிய கூட தலை காட்டாம வீட்டுக்குள்ளயே கிடக்கிறான்'

‘பின்ன வேலை போன வயித்தெறிச்சல் இருக்கும்ல. சரி நமக்கெதுக்கு அடுத்த வீட்டு வம்பு. நம்ம வேலைய பார்ப்போம்'. என்று எதிர் வீட்டு வம்பை முழுவதுமாக பேசி முடித்துவிட்டு தன் வேலையை தவிர அடுத்தவர் விவகாரங்களில் கவனம் செலுத்தாத உயர்ந்த குணம் படைத்த தோரணையில் கோலம் போட துவங்கினாள் பாக்யம்.

‘ஆமா. இந்த கோலம் வேர சரியா வரமாட்டேங்குது'

'அட சிக்கல் கோலம் போடுற போல. உனக்கு ரங்கோலி தான போட வரும்'

‘ஆமா. நீ தினமும் அழகழகா சிக்கல் கோலம் போடுறியே. நம்மளும் போடுவமேனு போட்டேன். கழுத சரியா வராம எங்கையோ ஒரு பக்கம் இழுத்திட்டு போகுது'

'அது சரி. நான் போடுறேனு சிக்கல் கோலம் போட போய் இப்ப நீ தான் சிக்கிட்டு நிக்கிற' நகைத்தாள் பாக்யம்.

‘ஆமா. நாளைல இருந்து ரங்கோலியே போட்றனும். எதுக்கு சிக்கல்' 

'அது சரி'

இரண்டு பேரும் தங்கள் கோலங்களை முடித்துவிட்டு விளக்கு வைக்க வீட்டுக்குள் நுழைந்தனர்.





Comments

Popular posts from this blog

கொடை

போதை