அறியாமை

 இந்த தெருவிலேயே அந்த வீடு தான் மூன்று மாடிகள் கொண்ட ஒரே வீடு. மூன்று மாடிகளின் சுவற்றிலும் சுற்றி சுற்றி போடப்பட்டிருந்த சீரியல் பல்புகள் மினிட் மினிட் என மின்னி கொண்டிருந்தது. வீட்டுக்குள்  பல ஆண்களும் பெண்களும் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடி ஆளுக்கொரு வேலையை பார்த்தபடி இருந்தனர்.அதில் யாரும் வெளி மனிதர்கள் கிடையாது. அவர்கள் அத்தனை பேரும் அந்த வீட்டு மனிதர்கள் தான். இருபதாம் நூற்றாண்டிலும் கூட்டு குடும்பமாய் வாழும் வீடு என்ற பெருமை இந்த வீட்டுக்கு இருந்து வருகிறது. அந்த பெருமைக்கு இந்த வீடு முற்றிலும் தகுதியானதே. சுந்தரம்,வேலு,தம்பிரான்,சுடலை,பெருமாள் என்று ஐந்து அண்ணன் தம்பிகள் தங்கள் குடும்பத்தோடு இங்கு வாழ்கின்றனர்.ஐவருக்கும் ஒரே தொழில் தான், மர தொழிற்சாலை. கிட்டதட்ட முப்பது வருஷங்களாய் அவர்கள் அதை ஒன்றாய் நடத்தி வருகிறார்கள்.சுந்தரம்,வேலு மற்றும் தம்பிரானுக்கு ஆளுக்கு இரண்டு பெண் குழந்தைகள், சுடலை மற்றும் பெருமாளுக்கு ஆளுக்கொரு பெண்ணும் ஆணும் என்று மொத்தம் இந்த வீட்டின் பிள்ளை செல்வங்களின் எண்ணிக்கை பத்து.  பெருமாளின் மகள் இந்திராவை தவிர அங்குள்ள அத்தனை பெண் வாரிசுகளும்  அவர்களின் தூரத்து சொந்தத்திலேயே மணமுடிக்க பட்டு பக்கத்து ஊரில் தான் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கும் ஆளுக்கொரு பெண் குழந்தை இருக்கிறது இப்பொழுது. இன்னும் ஒரு நாளில் இந்திராவிற்கும் கல்யாணம் ஆக இருக்கிறது. அதற்காக பக்கத்தில் ஊரில் இருக்கும் இந்த வீட்டிலிருந்து வாக்கப்பட்டு போன பெண் பிள்ளைகள் அனைவரும் தங்கள் கணவன் மற்றும் பிள்ளைகளோடு ஒரு வாரத்திற்கு முன்பே அங்கு வந்து விட்டார்கள். மூன்று தலைமுறை மனிதர்களும் நிரம்பி வீடே கோலாகலமாய் இருந்தது. கல்யாண வேலையை பார்ப்பதற்காக ஒரு வேலைக்கார பெண்மணியும் நியமிக்கப்பட்டிருந்தாள்.அவளும் இவர்களுக்கு அந்நியம் இல்லை.எதோ ஒரு வழியில் அவள் இவர்களுக்கு தூரத்து சொந்தம் தான். கணவனை இழந்த அவள் தன் இரண்டு பிள்ளைகளையும் கரையேற்றுவதற்காக ஐந்தாறு வீடுகளில் வீட்டு வேலை பார்த்து பிழைத்து கொண்டிருந்தாள். உதவிக்கு யாரையோ அழைப்பதற்கு தங்களுக்கு தெரிந்த பெண்ணை அழைத்தால் சவுகரியமாக இருக்கும் என்று முடிவெடுத்து இந்த வீட்டின் மூத்த மனுசியான சுந்தரத்தின் மனைவி அம்புஜம் அவளை வேலைக்கு நியமித்திருந்தாள்.


இன்று மாலை மணப் பொண்ணுக்கு நலுங்கு வைக்கும் விழா. அதற்கான ஏற்பாடுகளே தடபுடலாய் நடந்தேறி கொண்டிருந்தது. வீட்டின் அத்தனை பேரும் தலை நிறைய பூ சூடி முகம் நிறைய மஞ்சள் பூசி நன்றாக தங்களை அலங்கரித்து அங்குமிங்கும் வலம் வந்த வண்ணம் தங்கள் வேலையை கவனித்து கொண்டிருந்தனர். அந்த வேலைக்கார பெண்ணிற்கும் புது துணி எடுத்து கொடுத்திருந்தாள் அம்புஜம்.அதை உடுத்திக்கொண்டு அவளும் அவள் தகுதிக்கு ஏற்றாற்போல் நேர்த்தியான சிறு ஒப்பனைகள் செய்து தன்னை அலங்கார படுத்திகொண்டு தன் வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள். சுடலையின் மகள் வழி வந்த ஐந்து வயது பேத்தி ரகானாஅங்குமிங்கும் நடமாடி கொண்டிருந்த அந்த வேலைக்கார பெண்ணை வச்ச கண்ணு வாங்காமல் கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்தாள்.பிறகு எதையோ யோசித்தபடி மணப் பெண் அறைக்குள் ஓடி ஒரு சிறு துண்டு மல்லிகை பூவோடு திரும்ப வந்தாள்.


“அத்தை” என்று அந்த வேலைக்கார பெண்மணியின் முந்தானையை இழுத்தாள் ரகானா.


”என்னம்மா??” என்று தன் முந்தானையை நோக்கி தலையை திருப்பினாள் அவள்.


“என் அம்மா சித்தி பாட்டி எல்லாருமே பூ வச்சிருக்காங்க.உங்க தலையில மட்டும் தான் பூ இல்ல. இந்தாங்க நீங்களும் வச்சிக்கோங்க.”


பதில் கூற முடியாமல் அந்த பூவையும் கைகளில் வாங்கி கொள்ள முடியாமல் அமைதியாக ‘என்ன சொல்லி இந்த குழந்தைக்கு புரிய வைப்பது கடவுளே' என்று மனதிற்குள் புழுங்கியவாறு நின்றிருந்தாள் அவள்.


“இந்தாங்க வாங்கி வைக்க. நான் கூட பூ வச்சிருக்கேன் பாருங்க. நீங்களும் வச்சிக்கோங்க” என்று ஒரு கையால் தன் குடுமியை சுட்டிக் காட்டிக்கொண்டே இன்னொரு கையில் உள்ள பூவை நீட்டியது அந்த குழந்தை.

“ தேவி அந்த தாம்பூல தட்டை எங்க வச்சிருக்க…” என்று கூக்குரல் இட்டபடியே அந்த வேலைக்கார பெண்ணின் அருகில் அம்புஜம் வர அவள் அசையாமல் ஏன் இப்படி உரைத்து நிற்கிறாள் என்று புரியாத படி அம்புஜம் அவள் முகத்தையே பார்த்தாள்.

“பாட்டி. இந்த ஆத்தை மட்டும் தலையில பூ வச்சிக்கல. நான் கொண்டு வந்து கொடுத்தாலும் வாங்கிக்க மாட்டங்றாங்க”

இப்பொழுது அம்புஜத்திற்கு சூழ்நிலை விளங்கியது.

“தேவி நீ போய் அந்த தாம்புளத்திற்கு தேவையான தட்டுகளை எடுத்திட்டு வா. நான் இவளை சமாளிச்சிக்கிறேன்” என்று அம்புஜம் தேவியை அந்த தர்ம சங்கடமான நிலையில் இருந்து இடமாற்றி விட, “சரிம்மா” அன்று அம்புஜம் அங்கிருந்து நகர்ந்தாள். அம்புஜம் தன் பேத்தியின் முன்னே முட்டி போட்டு உட்கார்ந்தாள்.

‘இங்க பாரு குட்டி. அந்த அத்தை பூ வச்சிக்க கூடாது. அதுனால இதை எங்க இருந்து எடுத்திட்டு வந்தீங்களோ அங்கேயே கொண்டு வச்சிருவீங்களாம். சரியா” என்று பேத்தியின் கன்னத்தை கிள்ளினாள் அம்புஜம்.

“ஏன் அவங்க பூ வைக்க கூடாது”

“வைக்க கூடாதுடா”

“ஏன் வைக்க கூடாது சொல்லுங்க. அப்பதான் இதை எடுத்த இடத்தில் வைப்பேன்”

“அது…..உங்க அம்மாக்கு உங்க அப்பா யாரு??”

“ ஹஸ்பண்ட்”

“ம்ம்…கரெக்ட்”

“ஆனா அந்த அத்தைக்கு ஹஸ்பண்ட் இல்லை. ஹஸ்பண்ட் இல்லைனா பூ வைக்க கூடாது”

“ஓ..அப்ப ஏன் இந்திரா சித்தி பூ வச்சிருக்காங்க. அவங்களுக்கும் இப்ப ஹஸ்பண்ட் இல்லேல.??”

“ அவங்களுக்கு நாளைக்கு கல்யாணம் ஆகுறப்ப  ஹஸ்பண்ட் வர போறாங்கள்ல.அதான் வச்சிருக்காங்க”

“ஓ…சரி பாட்டி. நான் இதை இந்திரா சித்தி ரூம்லே வச்சிட்றேன்.” என்று கூறிக்கொண்டே தன் குடுமியில் இருக்கும் பூவை பிய்த்து எடுத்தது அந்த குழந்தை.

“குட்டி அதை ஏன் பிய்க்றீங்க. அப்படி பண்ண கூடாது”

“ எனக்கும் ஹஸ்பண்ட் இல்லையே. ஹஸ்பண்ட் இருந்தா தான் பூ வைக்கனும்னு நீங்க தான சொன்னீங்க. அப்ப நானும் பூ வச்சிக்க கூடாதுல. நான் எல்லா பூவையும் இந்திரா சித்தி ரூமிலே வச்சிட்றேன்” என்று தன் மழலை மொழியில் படபடவென  கூறியவாரே மணப்பெண் அறையை நோக்கி நில்லாமல் ஓடினாள் ரகானா.

அம்புஜம் திகைத்து நின்றாள்.



Comments

Popular posts from this blog

சிக்கல் கோலம்

கொடை

போதை