சுத்தம்

 இடது புறமாய் பங்கஜத்தை திருப்பி விட்டுவிட்டு அவள் இயற்கை உபாதை அசுத்தங்களை சிறு முகசுழிப்பும் காட்டாமல் எடுத்து அப்புறபடுத்திக் கொண்டிருந்தாள்  கருப்பாயி.அசுத்தம் எல்லாம் அள்ளி போட்டுவிட்டு பங்கஜத்தை மெல்ல எழுப்பி உட்கார வைத்து கையில் தூக்கி கொண்டு அந்த அறையில் இருந்த 4*4 குளிரூமிற்குள் நுழைந்தாள்.ஐடம் போலிருந்த பக்கத்தை அந்த குளியலறையின் மூலையில் கிடந்த முக்காலியில் அமர வைத்தாள்.இடப்புறமாய் இழுத்து வைக்கப்பட்டிருந்த பங்கஜத்தின் கையோடு உயிரற்று போயிருந்த அவளின் வலது கையையும் சேர்த்து வைத்தாள். பங்கஜத்தின் காலை தூக்கி அந்த முக்காலியின் கட்டை மீது வைத்தாள்.மெல்ல பங்கஜத்தின் மேனி ஆடைகள் களைந்தாள் கருப்பாயி. பின்பு கம்பியில் முன்னரே அவள் போட்டு வைத்திருந்த துணியை எடுத்து அண்டாவில் நிரப்பி வைத்திருந்த சுடு தண்ணியில் மெல்ல நனைத்து இறுக பிழிந்து பங்கஜத்தின் ஒவ்வொரு அங்கமாய் துடைத்து சுத்தம் செய்தாள்.பின்பு  பங்கஜத்திற்கு புது துணி மாற்றி விட்டு அவளை கை தாங்கலாக அழைத்து வந்து பங்கஜத்தின் அறையில் இருந்த ஒற்றை நாற்காலியில் அமர வைத்து விட்டு,பங்கஜம் படுத்திருந்த கட்டிலை சுத்தம் செய்ய துவங்கினாள்.

நான்கு வருடங்கள் முன்பு வரை பங்கஜம் தான் அந்த பெரிய வீட்டின் மகாராணி,மந்திரி எல்லாம்.அவள் கண் அசைவின் உத்தரவு கேட்டு தான் நகர்ந்தன அந்த வீட்டின் மனிதராயினும் பொருள்களாயினும்.பெரிய வீட்டு சாஸ்திரிகள் வீடு தான் அந்த ஊரில் இருந்த ஒரே ஐயர் வீடு.பங்கஜம் தான் பெரிய வீட்டின் மூத்த மருமகள்.அவள் கணவனுக்கு அடுத்து இரண்டு தம்பிகள் இருந்தனர். பங்கஜம் கல்யாணமாகி வரும்பொழுதே அவள் மாமியார் உயிரோடு இல்லை. அவள் மாமியார் இறந்த ஆறாம் மாதம் தான் அவள் அந்த வீட்டிற்கு மருமகளாக வந்தாள்.பங்கஜம் அவள் கணவனுக்கு முறை பொண் தான். கெட்டது நடந்த வீட்டில் ஒரு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக தான் தன் சொந்த அக்கா மகளான பங்கஜத்தை அவசர அவசரமாக தன் மூத்த மகனுக்கு மணம் முடித்து தன் வீட்டின் மருமகளாக அழைத்து வந்தார் பெரிய வீட்டு சாஸ்திரி.

அவள் அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுது, அவள் மூத்த கொழுந்தனுக்கு வயது 14,இரண்டாவது  கொழுந்தனுக்கு வயது 12. பங்கஜத்தின் மூத்த கொழுந்தனுக்கும் அவள் கணவன் சுப்பையருக்கும் 10 வயது வித்தியாசம். பங்கஜத்திற்கும் சுப்பையருக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம். அவளின் இரண்டு கொழுந்தனார்களுக்கும் அண்ணி என்ற முறையையும் தாண்டி ஓர் அம்மாவாக தான் நடந்து கொண்டாள் பங்கஜம்.

அவளின் சிக்கனமான மற்றும் ஆச்சாரமான நடத்தையால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டின் பொறுப்புகள் அவள் கண்காணிப்பிற்கு கீழ் விடப்பட்டது. பெரிய சாஸ்திரிகளின் ஆணைப்படி. ஒவ்வொரு விஷேசத்தையும் மிகுந்த பய பக்தியோடு சாஸ்திர சம்பிரதாய நடைமுறைகளை கடைபிடித்து அனுசரிப்பாள் பங்கஜம். காலம் நகர்ந்தது. பங்கஜத்திற்கும் மூன்று ஆண் வாரிசுகள் பிறந்தது. மூன்றுக்கும் இரு இரு வருட இடைவெளிதான்.இப்பொழுது அவள் மூன்று குழந்தைகளையும் சேர்த்து பங்கஜத்திற்கு ஆறு குழந்தைகள். ஆம் அவள் இரண்டு கொழுந்தன்மார்களோடு சேர்த்து இப்பொழுது பெரிய சாஸ்திரியும் அவள் குழந்தை அட்டவணையில் சேர்ந்துவிட்டார். சற்றும் முகம் சுளிக்காமல் அனைவரையும் அன்பாய் கவனித்து வந்தாள் பங்கஜம்.வீட்டு மனிதர்களோடு சேர்த்து அந்த வீட்டின் ஆவின செல்வங்களையும் பங்கஜம் தான் கவனித்து வந்தாள். 

பெரிய வீட்டின் மாட்டுக் கொட்டகையில் இருந்த ஒற்றை பசுவும் அதன் இரண்டு கன்றுகளும் பங்கஜத்தை பார்க்கும் பொழுது அவைகள் முகத்தில் ஒரு பூரிப்பு காட்டும். பங்கஜம் அவற்றிடம் காண்பிக்கும் கனிவே அதற்கு காரணம்.ஒரு கட்டத்தில் பெரிய சாஸ்திரியும் படுக்கையில் விழுந்து விட்டார்.இதனால் பங்கஜத்தின் வேலை பளு இன்னும் அதிகரித்தது.

அவள் வேலை பளு நாளுக்கு நாள் கூடி கொண்டே சென்றதை சுப்பையரால் தாங்க முடியவில்லை.

அன்று இரவு எல்லா வேலையையும் முடித்து விட்டு பங்கஜம் அவள் அறைக்கு வருகையில் மணி இரவு பதினொன்றை தாண்டி இருந்தது. அவளின் மூன்று மக்களும் வரிசையாக தரையில் அவர்கள் படுக்க வைக்கப்பட்ட இடத்தில் ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தனர். சுப்பையா பங்கஜத்திற்காக காத்திருக்கும் நேரத்தை கழிப்பதற்காக கட்டிலில் கால் நீட்டி சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தலையணையில் தன் முதுகை சாய்த்தவாறு ஆசுவாசமாய் அமர்ந்து ஏதோ ஒரு கதை புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தார்.

குழந்தைகள் விழித்து விட கூடாது என்று கதவை மெல்ல கவனமாய் சாத்தினாள் பங்கஜம். கையில் எடுத்து வந்த தண்ணீர் சொம்பை கட்டிலருகே கிடந்த முக்காலியில் வைத்து விட்டு சுப்பையரின் பாதத்தின் அருகே அமர்ந்தாள் . தன் நீட்டிய காலை மடக்கி பங்கஜத்தின் அருகே நெருங்கி வந்தார் சுப்பையர்.

‘ஏன்டீ அசடு இத்தனை வேலையை தினமும் இழுத்து போட்டு பண்றியே. அசதியா இல்லையா நோக்கு'

'நம்ம வீட்டு வேலையை நான் பாக்காம,யாருண்ணா பாக்க'

‘அது சரிதாண்டீ. அதுக்குனு இப்படி ஒன்டியா கஷ்டபடனுமா. ஒத்தாசைக்கு ஒரு வேலைகாரி தான் வச்சுகோயேன்டி.’

'என்னணா பேசுறேள். நம்ம ஆத்துக்குள்ள வேலைக்காரியா.அடுத்த சாதி காரிய நம்ம ஆத்துக்குள்ள விட்டா நம்ம ஆத்து சுத்தம் என்னடி ஆகுறது.’

‘அதுவும் சரிதாண்டி.ம்ம் என்ன பண்ணலாம்….’’

‘என்ன சரிதான். நான் சொல்லாம இது உங்களுக்கே உரைக்கிலையா'

‘இல்லடி நீ கஷ்படுறத பாத்ததில புத்தி இது யோசிக்க மறந்திடுச்சு'

‘அது சரி'

‘ம்ம் வேணும்னா பசுக்கள பார்த்துக்க ஓத்தாசைக்கு வேலைக்கு ஆள் வச்சுகோயேன். வரவ சவகாசத்த தொழுவத்தோட நிப்பாடிக்கோ.உனக்கும் வேலை குறையும். வீட்டின் சுத்தமும் குறையாது'

'ம்ம் இது நல்ல யோசனையாக இருக்கு.பார்க்கலாண்ணா.’’

‘சரிடி.நேரத்தோட படுப்போம்'

'சரிண்ணா' என்று விளக்கை அணைத்தாள் பங்கஜம்.

இரண்டு நாட்களுக்கு பிறகு சுப்பையரின் யோசனைப்படி அந்த ஊரின் கீழ் சாதி பெண்களில் ஒருத்தியான ராக்கம்மா பெரிய வீட்டு தொழுவத்து வேலைக்கு நியமிக்கப்பட்டாள். பங்கஜத்தின் வேலை பழுவும் சற்று குறைந்தது.

இப்பொழுது பங்கஜத்தின் மூன்று மகன்களுக்கும் கல்யாணமாகி ஆளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கு. பங்கஜத்தின் கொழுந்தன்மார்களும் பேரன் பேத்தி எடுத்தாச்சு. பெரிய வீட்டு சால்திரியும் இறந்து விட்டார். சுப்பையரும் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிறது.

நான்கு வருடங்கள் முன்னால் பங்கஜம் படுக்கையில் விழுந்து விட்டாள். எல்லாமே படுக்கையில் தான். அவளை பார்க்க அருவருப்பு பட்ட மருமகள்கள்,தொழுவத்தின் அருகே இருந்த 4*4 அறைக்கு அவள் படுக்கையை மாற்றி அவளை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு கருப்பாயியை நியமித்து விட்டனர்.

இந்த நான்கு வருடங்களாக கருப்பாயி தான் பங்கஜத்தை கவனித்து வருகிறாள்.

இன்றும் அந்த பணியில் தான்  கருப்பாயி ஈடுபட்டிருக்கிறாள்.

கட்டிலை நன்கு சுத்தம் செய்து முக்காலியில் உட்காரவைக்கப்பட்டிருந்த பங்கஜத்தை மெல்ல பிடித்து வந்து கட்டிலில் படுக்கவைத்தாள் கருப்பாயி.

‘பாட்டியை சுத்தம் செய்தாச்சா.’ என்று கருப்பாயின் தாய் ராக்கம்மா தொழுவத்தில் நின்றபடியே குரல் கொடுத்தாள்.

‘முடிஞ்சதும்மா. இதோ வரேன் என்று பங்கஜத்தை கட்டிலில் கிடத்தியபடியே பதில் குரல் கொடுத்தாள் கருப்பாயி.


Comments

Popular posts from this blog

சிக்கல் கோலம்

போதை

கொடை