வலி
சரண்யாவிற்கு சீமந்தம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிறது. அவள் சீமந்தத்திற்காக வந்த அவளின் தங்கை ,அக்காவிற்கு ஒத்தாசையாக சரண்யா வீட்டில் தங்கியிருந்தாள். சரண்யாவிற்கு இது இரண்டாம் பிரசவம். ஆதலால் சீமந்தம் முடிந்து அம்மா வீட்டிற்கு செல்லும் சடங்கு எதுவும் கிடையாது. சொல்லபோனால் இரண்டாவது குழந்தைக்கு சீமந்த சடங்கே கிடையாது என்று தான் அவள் தாய் கூறினாள். ஆனாலும் தனது ஆசைக்காக சரண்யா அவள் கணவனிடம் தனக்கு சீமந்தம் நடத்த கேட்டதால் அவனும் அவளின் ஆசைக்காக அவன் செலவிலேயே மனைவிக்கு சீமந்தம் நடத்தினான். ஆனால் தலை பிள்ளைக்கு நடத்தியது போல் விமர்சையாய் நடத்தவில்லை.சரண்யாவின் தாய்,தந்தை,அண்ணன் அவளின் நெருங்கிய தோழிகள் இருவர்,சரண்யாவின் ஒன்று விட்ட தங்கை ராணி, இவர்களே அந்த சீமந்த வைபோவத்தின் விருந்தாளிகள். ராணியின் சொந்த ஊர் மதுரை. அவள் சென்னையில் இருக்கும் மென்பொறியியல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறாள். சொந்தம் என்று கூற அவளுக்கு சென்னையில் பலர் இருந்தாலும், அவள் சரண்யாவின் வீட்டை தவிர வேறு எங்கும் சென்று தங்கி இளைபாறுவதில்லை. அதுவும் கூட அடிக்கடி செல்ல மாட்டாள். மூன்று அல்ல நான்கு மாதங்களுக...